By srssethuraman | April 14, 2017 | 0 Comment
நமது கல்வி அறிவின் அளவுகோல்!
ஒரு தனி மனிதன் ஒருவன் தான் கற்ற கல்வியினை அவனுடைய வாழ்வாதாரத்திற்கு மட்டும் பயன்படுத்த கூடாது. தனது கல்வியால் பெற்ற அறிவினை சமூகத்திற்கு [நாட்டிற்கும்] பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக ஒவ்வொருவரும் நினைத்து அதனை நடத்திக்காட்டினால் நம் இந்திய திருநாடு விரைவில் வல்லரசுகளில் ஒன்றாக விளங்கும்.
ஆனால் தற்போதைய இந்திய கல்விமுறை ஒரு கேள்விக்குறியாக அமையப்பெற்றுள்ளது. ஏனெனில் நம் நாட்டில் 90 சதவீதம் பேர் படிக்கும் படிப்பிற்கும் செய்கிற வேலைகளுக்கும் சிறு துளி கூட சம்பந்தமே இல்லை. இதில் சமுதாயத்திற்கு வேறு எப்படி உதவுவது?
இன்றைய மாணவர்கள் கல்வியின் அறிவினை உணர மறுத்து அதனை மனப்பாடம் செய்ய விழைகின்றனர். இதன் பாதிப்பு எந்த ஒரு சீரிய முன்னேற்றமும் அவர்களின் வாழ்வாதாரத்திலும், அவர்கள் சார்ந்துள்ள சமூகத்திலும் தென்படுவதில்லை.
பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்:
1) இரசாயன பொறியியல் படித்த இளைஞன் பிளாஸ்டிக் முலாம் பூச பட்ட காகித கோப்பையில் சூடான தேநீர் அருந்துகிறான்..
2) கட்டுமான பொறியியல் படித்த இளைஞன் படிக்காத கட்டிட தொழிலாளி திறமை கண்டு வியந்து பார்க்கிறான்.
3) எண்ணறற்ற இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களின் ஆய்வறிக்கைகள் பல்கலைக்கழக நூலகத்தில் உறங்கிக்கொண்டு இருக்கிறது.
5) படிப்பறிவு இருந்தும் பிளாஸ்டிக் காகித்தை அன்றாட உபயோகத்திற்க்கு பயன்படுத்தி அதை நடுத்தெருவில் எரிந்து செழுமையான நிலத்தை சீர் அழிக்கின்றனர்.
4) இயற்பியல் படித்த இளைஞன் பேருந்தில் நடத்துனர் எந்த பிடியும் இல்லாமல் டிக்கெட் கொடுப்பதை வியந்து பார்க்கிறான்.
6) அதிநவீன தகவல் தொடர்பு உத்திகள் இருந்தும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற உண்மையான இளைஞர்களின் விவரங்கள் ஏன் சேகரிக்கப்படவில்லை. அப்படி சேகரித்து இருந்தால் ஏன் அவர்களை மற்ற பிரச்சனைகளுக்கு முழுமையாக அணி திரட்ட முயவில்லை?.
முதலில் உன்னுடைய கல்வி மூலம் கிடைத்த அறிவினை உன்னை சார்ந்த சமூகத்திற்க்காக உபயோகப்படுத்தி பார்.. உன் சமூகம் தானாக மாறும் இதுதான் நிதர்சன உண்மை.
எந்த ஒரு துறை சார்ந்த படிப்பாக இருந்தாலும் சரி அதனுடைய அறிவு சார்ந்த முக்கிய விழுமியங்களை ( மதிப்புகளை) உணர்ந்து படிக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் பட்சத்தில் அந்த துறை சார்ந்த எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இயலாத சூழ்நிலைகள் உருவாகிறது.
கவலைக்குரிய உண்மை யாதனில் உலக மயமான வர்த்தக சந்தைகளில் நம் இந்தியர்கள் இன்னும் தொழில்நுட்ப ஊழியர்களாகவே உள்ளனர் . அது கூகிள் சி.இ.ஓ சுந்தர் பிட்சை முதல் டீ சி ஸ், விப்ரோ அல்லது இன்போசிஸ் இரவு பணி நேர தகவல் தொழில்நுட்ப ஊழியர் வரை… பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதனால் நாடும் நாடு சார்ந்த அறிவு விடயம் எல்லாம் வீணாக கெட்டு சீரழிகிறது. எடுத்துக்காட்டாக நீர் மேலாண்மை பிரச்சனைகள், சுகாதார சீர்கேடுகள், இயற்க்கை வள அழிவுகள், அரசியல் நிர்வாகதன்மை மற்றும் பல .
இதற்கு என்ன தான் தீர்வு ?
நாம் கற்கும் கல்வி எதுவானாலும் சரி அதற்கு ஓர் அளவுகோல் வேண்டும். அந்த அளவுகோல் நம்மையும் நம்முடைய சமூகத்தையும் பேணிக்காக்க முயலவேண்டும். இளைஞர்கள் அமைப்பு அதனை திறம்பட செய்து அதனை மக்களிடம் அவர்கள் தான் செய்தார்கள் என்று தெரிவுநிலைபடுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் பொறியியல் துறையில் படிக்கிறான். பொறியியல் மற்றும் அதனுடைய துறை சார்ந்த விழுமியங்கள் முழுவதும் அறிய முற்படுகிறான். இந்த முயற்சி அவனுடைய வாழ்வாதாரத்திற்கு ஏற்ற கூலியை பெற்று தரும். அதோடு அவன் நின்றுவிடாமல் அந்த அறிவாற்றலை தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு பயன்படுத்த வேண்டும். இவனுடைய அறிவாற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது என்று அவனால் உணரப்பட்டால் மட்டுமே அவனுடைய கல்வி அறிவு அவனுக்கும் அவனை சார்ந்த சமூகத்திற்கும் பயன்படும். அப்படி இயலவில்லை என்றல் அந்த துறை சார்ந்த விழுமியங்களை அவன் மனப்பாடம் செய்து உள்ளான் என்று தெளிவாக தெரிகிறது.
வாழ்வாதார நன்மைகள் :
1) அவன் துறை சார்ந்த வேலையில் பணி அமர இயலும்.
2) அவன் துறை சார்ந்த தொழில் தொடங்க இயலும்.
3) பணிச்சுமை இல்லாமல் நிம்மதியா வருமானம் ஈட்ட இயலும்.
4) வேலை மற்றும் வாழ்க்கை என்று சமநிலையில் பயணிக்க இயலும்.
5) தொழில் தர்மம் சார்ந்து தன் வேலையில் மனதிருப்தியுடன் பங்களிக்க முடியும்.
சமூகத்திற்க்கான நன்மைகள் :
1) பொறியியல் துறை சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சேர்ந்து காற்று மற்றும் நீர் மாசுபாடு கண்காணிப்பு கருவிகளை குறைந்த பொருள் செலவில் நகரம் முழுவதும் நிறுவி அதன் பாதிப்புகள் மற்றும் ஆபத்தின் கணிப்புகளை மக்களுக்கு இணையம் அல்லது சமூக வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு செய்ய முற்படவேண்டும்.
2) பள்ளிக்கரணை போன்ற குப்பை சேகரிக்கும் மையத்தில் இருந்து வெளியாகும் விஷ வாயுக்கள் பற்றி இளைஞர்கள் குழு ஆராய்ச்சி மேற்கொண்டு அதன் முடிவுகளை அதன் பாதிப்புகள் மற்றும் ஆபத்தின் கணிப்புகளை மக்களுக்கு இணையம் அல்லது சமூக வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு செய்ய முற்படவேண்டும்.
3) பேரிடர் சமயத்தில் குறைந்த தகவல் தொழில்நுட்ப வசதி கொண்டு புவியியல் தகவல் முறைமை நடைமுறைப்படுத்த முயலுவது.
4) இயற்கை வள கொள்ளை மற்றும் சீரமைப்புகளின் தரவு பகுப்பாய்வு அறிக்கை வெளிடுதல் (புவியியல் தகவல் முறைமை)
5) இளைஞர் குழு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாக்கும் அவர்களின் செயல் மதிப்பு கூட்டும் வகையில் உலக தரம் வந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் செய்து தருதல்.
6) டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையை தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கு பயிற்சி அளித்தால் மற்றும் பல…
தமிழ் படித்தவனாக இருந்தலும் சரி பொறியில் படித்தவனாக இருந்தாலும் சரி, அனைத்து துறை இளைஞர்களும் தன்னுடைய கல்வி அறிவினை காலத்திற்க்கு ஏற்ப அளவிட்டால் மட்டும் போதும் நல்ல சமூகத்தையும் நல்ல வாழ்வாதாரத்தையும் பெற இயலும்.
மேற்படிப்புகள் படித்து இருந்தாலும், செயற்கரிய செயல்கள் செய்துஇருந்தாலும் இளைஞர்களை இன்றய பெற்றோர்கள் சிறுபிள்ளையாக பாவிப்பது இயற்க்கையின் முரண். பெற்றோர்களே இப்படி இருக்க ஓட்டளிக்கும் மக்களை என்ன சொல்லுவது.
இன்றைய இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அரசியலில் களம் இறங்குவதற்கு முன் தங்கள் படித்த கல்வியின் அறிவை சமூகத்திற்காக விதைக்க வேண்டும் மற்றும் அதனை மக்களிடம் அவர்கள் தான் செய்தார்கள் என்று தெரிவுநிலைபடுத்த வேண்டும் .
சினிமா எனும் மக்களை மயக்கும் ஆயுதம் ஏந்தி கானல் நீராய் 50 வருட ஆட்சியை புரியும் அரசியல்வாதிகளுக்கிடையே. இளைஞர்கள் கல்வி அறிவு எனும் ஆயுதம் (பிரம்மாஸ்திரம்) கொண்டு களத்தில் இறங்க வேண்டிய இளைஞர்கள் உணர்ச்சிவசம் எனும் மாயையில் வீழ்ந்து நிராயுதபாணியாக வலம் வருவது சகிக்கவில்லை ஓட்டளிக்கும் மக்கள் ஏற்றுகொள்ளுவது மிக கடினம் …
ஓட்டளிக்கும் மக்கள் முட்டாள்கள் அல்ல! இன்றைய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளுக்கு இணையான போட்டியாளர்களை 50 வருடங்களாக தேடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.. இந்த நிமிடம் வரை அப்படி எவரும் கிடைத்த பாடு இல்லை.. இளைஞர்களே உங்களை நிரூபிக்கும் தருணம் இது நிரூபித்து காட்டுங்கள்.. பூவை மொய்க்கும் தேனீக்களாக மக்கள் உங்களை பின்தொடருவர் .. விழுமின் எழுமின்.. விரைவில் சமூகம் இளைஞர்கள் கையில்…..
ஊமையர்கள் கூட்டத்தில் உளறுபவன்தான் கெட்டிக்காரன். மழலை பேச்சுக்கு இங்கு இடம் இல்லை..